Monday 19 March 2018

natarajan part 1

ஆர்.மணிசென்னை: சசிகலாவின் கணவர் ம.நடராசன் சென்னையில் இன்று காலமானார். சில மாதங்களுக்கு முன்பு நடராசனுக்கு சிறு நீரகம் மற்றும் கல்லீரல் (liver) மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.சிகிச்சை முடிந்த சில நாட்களில் நடராசன் வீடு திரும்பினார். ஆனால் திடீரென்று மார்ச் 16 ம் நாள் அவருக்கு இதயத்தில் வலி ஏற்பட்டு, சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த மருத்துவமனையில் தான் நடராசனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடராசனின் உடல் நிலை கவலைக்கிடமாகவே (critical) ஆக இருப்பதாகவே அந்த மருத்துவமனை அறிவித்தது. இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்துவிட்டது. தமிழக அரசியலில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக எப்போதுமே புதிரான மனிதராக இருந்து கொண்டிருக்கும் ம.நடராசன், உண்மையில் யார்? எந்த அரசியல் மற்றும் அரசு பதவிகளிலும் எப்போதுமே உயர்ந்த ஸ்தானத்தில் அமர்ந்திராத மனிதராகத்தான் நடராசன் இருந்து வந்திருக்கிறார். ஆனால் நடராசன் கிட்டத்தட்ட தான் நினைத்ததை எல்லாம் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலங்களில் சத்தமின்றி சாதித்தே வந்திருக்கிறார். ஜெயலலிதா ஆண்ட 1991 -1996, 2001 - 2006, 2011 - 2016 வரையிலும் நடராசன் நினைத்தது எல்லாம் ஆட்சியிலும், அரசிலும் நடந்தது. எப்போதும் திரை மறைவிலிருந்து மட்டுமே அரசியல் செய்பவராகத் தான் நடராசன் இருந்து வந்திருக்கிறார். 2016ல் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட பிறகும் இதுதான் நிலைமை. ஜெயலலிதா செப்டம்பர் 22, 2016 ல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, வழக்கம் போலவே திரை மறைவிலிருந்து கொண்டு அநேகமாக தமிழ் நாட்டையே ஆண்டார் நடராசன் என்றுதான் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லுகிறார்கள். இந்த பலம் அவருக்கு எப்படி வந்தது? நடராசனின் மனைவியின் பெயரை சொன்னால் எல்லோருக்கும் விஷயம் புரியும். நடராசனின் மனைவியின் பெயர் சசிகலா. ஆகவே இனிமேல் யார் இந்த நடராசன் என்ற கேள்வியை எவரும் கேட்க மாட்டார்கள். நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டோ அல்லது கையாலாகாத ஒரு கோழையின் கோவத்தை சுமந்து கொண்டோ தங்கள் தங்கள் வாழ்க்கை பாதைகளில் போய் விடுவார்கள். ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா வின் கணவர் நடராசன் 1991 ம் ஆண்டு ஜெ முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ஜெ வின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவரது மனைவி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் பலரும் போயஸ் தோட்டத்திலேயே தான் வசித்து வந்தனர். 1991- 96 ஆட்சிக் காலத்தில் போயஸ் தோட்டத்துக்கு வெளியில் இருந்து கொண்டே நடராசனால் பல காரியங்களை சாதிக்க முடிந்தது. சில நேரங்களில் நடராசனின் நடவடிக்கைகள் அத்து மீறி போகும் போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 1994 ல் ஒரு முறை யதுகுல திலகன் என்ற உளவுத்துறை காவலரை தாக்கியதாக நடராசன் கைது செய்யப்பட்டார். இது ஜெ வின் 2001 - 2006 மற்றும் 2011 - 2016 ஆட்சிக் காலங்களிலும் தொடர் கதையாக மாறிப் போனது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் போலீஸ் நடராசனை ஒரு பக்கம் கைது செய்து சிறைக்கு அனுப்பும். ஆனால் சசிகலா எந்த சலனமும் இல்லாமல் ஜெ வின் போயஸ் தோட்ட வீட்டில் இருந்து கொண்டே தமிழக அரசாங்கத்தையும், அஇஅதிமுக வையும் ஆட்டி வைத்துக் கொண்டிருப்பார். கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் ஒரு முறை கூட கைது செய்யப்படாத நடராசன், திரும்ப, திரும்ப ஜெ ஆட்சிக் காலங்களில் கைது செய்யப் பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டார். முதன் முதலில் நடராசனுக்கும், ஜெயலலிதாவுக்கும் மோதல் 1989 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள் வந்தது. எம்ஜிஆர் டிசம்பர் 24, 1987 ல் இறந்தார். அஇஅதிமுக இரண்டாக பிளந்தது. 1988 ல் ஜானகி அம்மாள் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுக ஆட்சி, சட்டசபையில் நடந்த வன்முறைகளின் காரணமாக கலைக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு முழுவதும் தமிழகம் குடியரசு தலைவர் ஆட்சியில் இருந்தது. 1989 ஜனவரியில் நடந்த தேர்தலில் ஜெ அணி 27 இடங்களையும், ஜானகி அம்மாள் அணி ஒரு இடத்திலும் வென்றது. திமுக ஆட்சியை கைப்பற்றியது, மு.கருணாநிதி முதலமைச்சர் ஆனார். ஜானகி அம்மாள் அரசியலில் இருந்து தான் விலகுவதாக 1989 தேர்தலுக்கு பிறகு அறிவித்து, இரட்டை இலை சின்னத்துக்கு தான் உரிமை கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுவையும் திரும்ப பெற்றுக் கொண்டார். (தொடரும்) https://goo.gl/Woizak

No comments:

Post a Comment